மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

சுற்றுச்சூழலுக்காக நான்கு ஏக்கர் தைல மரங்களை வெட்டிய மனிதர்!

சுற்றுச்சூழலுக்காக நான்கு ஏக்கர் தைல மரங்களை வெட்டிய மனிதர்!

காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து மழை பெய்யும் அளவையும் குறைக்கும் தைலமரக் காடுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் பலரும் போராடிவரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தன் நிலத்தில் வளர்ந்த நான்கு ஏக்கர் தைலமரங்களை வெட்டி அகற்றியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாச்சிக் கோட்டையைச் சேர்ந்தவர் வயது 61 கருப்பையா. ஆலங்குடி பகுதியில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இவர் தனக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தைல மரங்களை நடவு செய்து வளர்த்து வந்தார். தைலமரக் காடுகளால் நிலத்தடி நீர் ஆதாரத்தைக் குறைத்துவிடுகிறது. அதோடு, காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து மழை பெய்யும் அளவையும் குறைக்கிறது. எனவே, மாவட்டத்தில் இந்த தைலமரக் காடுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் பலரும் போராடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதி முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

இதற்கிடையேதான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் மாவட்டத்தில் தைலமரக் காடுகள் படிப்படியாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தனர். தைலமரக் காடுகளை அமைத்துள்ள விவசாயிகள் தாமாக முன்வந்து இந்த தைலமரங்களை அகற்றி பயனுள்ள மரங்களை நடவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைச்சரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாச்சிக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு ஆர்.ஐ கருப்பையா எட்டு ஏக்கரில் சுமார் நான்கு ஏக்கர் தைலமரங்களை வேறோடு பிடிங்கி அழித்து, அந்த இடத்தில், செம்மரம், ரோஸ்வுட், தேக்கு வகை ரக 3,000 மரக்கன்றுகளை அங்கு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இதுபற்றி பேசியுள்ள கருப்பையா, “2014-ல தைலமரக் காட்டை நடவு செஞ்சேன். ஒருமுறை வெட்டிட்டேன். அப்போ இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. இப்ப கொஞ்ச வருஷமா பக்கத்துல இருக்க விவசாயிங்க சிலரே, ‘நீங்க நல்லா படிச்சு அரசு உத்யோகத்துல இருந்து ஓய்வு பெற்றுவிட்டீங்க. ஆனா, இந்தத் தைலமரத்தின் பாதிப்பு தெரியாதா? உங்களால எங்களோட விவசாயமும் பாதிக்குது’ன்னு சொல்லி ரொம்பவே கடிந்துகிட்டாங்க. இதற்கு இடையிலதான், சுற்றுச்சூழல் அமைச்சரும் தைலமரக் காடுகள் அழிக்கப்படும்னு சொல்லி தைலமரம் போட்ட விவசாயிகள் தாமாக முன்வந்து எடுக்கணும்னு கேட்டுக்கிட்டாரு.

இப்போ முழு நேரமா நான்கு ஏக்கர்ல இருந்த தைலமரங்களை வேறோடு பிடிங்கி அந்த இடத்துல தேக்கு, செம்மரம், வேங்கை, ரோஸ்வுட்ன்னு மரங்களை நட்டுக்கிட்டு இருக்கேன். கல்லுக்குடியிருப்புல மொத்தமா வாங்கிட்டு வந்து இந்த மரக்கன்றுகளை நடவு செய்யுறேன். இந்த மரங்கள் எல்லாம் பலன் தர 20 வருஷங்கள் வரையிலும் ஆகும். அதபத்தி கவலை இல்லை. அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு உதவட்டும். இன்னும் கொஞ்ச நாள்ல எட்டு ஏக்கர்லயும் தைலமரக் காடுகளை அழிச்சிட்டு மரக்கன்றுகளை நடவு செய்யணும்” என்று கூறியுள்ளார். ஓய்வுபெற்ற இவரின் முயற்சிக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

-ராஜ்

.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 24 செப் 2021