மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 செப் 2021

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவிகிதமாகும். 2021ஆம் ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும், அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்யவும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்த கொண்டிருக்கின்றன.

அந்த கோரிக்கையின்படி தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், தற்போது ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்கப் பணிகள், வரிமுறை மாற்றம், நகராட்சி ஆணையர் நியமனம் உள்ளிட்ட விதிகள் விரைவில் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 24 செப் 2021