மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கலாம் என்று ஒன்றிய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய, அச்சுறுத்தி கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் செத்து மடிந்துள்ளனர். இந்தியாவிலும் நான்கு லட்சத்துக்கு மேலான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் கடந்த விசாரணையின்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆறு வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 22) ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், “நாட்டில் ஜனவரி 2020 ஆண்டு முதல் தற்போதுவரை கொரோனா தொற்றால் 4.45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கொரோனா பேரிடரை கையாளும் பணியின் போதும், நிவாரண பணிகளின் போதும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50,000 இழப்பீடாக வழங்கலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தத் தொகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் உயிரிழந்தவர்கள் மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் கொரோனாவால் உயிரிழப்போருக்கும் வழங்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையை மாநில அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செலுத்தப்படும்.

இந்த நிவாரணத் தொகையைப் பெற சம்பந்தப்பட்டவர் கொரோனா தொற்றால்தான் உயிரிழந்தார் என்பதற்கான இறப்பு சான்றிதழ் உள்பட உரிய ஆவணங்களுடன் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளிக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

அதன்படி கொரோனாவால் உயிரிழந்ததற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிவாரணத் தொகை செலுத்தப்படும்.

கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் குறைகளோ, குழப்பமோ ஏற்பட்டால், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கூடுதல் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் துறைசார் நிபுணர் அடங்கிய குழு பரிந்துரை செய்யும்.

குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகளில் தகவல்களை உறுதி செய்த பின்னர் கொரோனா இறப்புக்கான திருத்தப்பட்ட ஆவணங்களை அளித்து படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க இக்குழு பரிந்துரை செய்யும். ஒருவேளை அளிக்கப்படும் தகவலில் குழு உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லையெனில், அதற்கான காரணத்தையும் தெளிவாக பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 23 செப் 2021