மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் பாங்க்: எம்.பி. வெங்கடேசன் கண்டனம்!

இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் பாங்க்: எம்.பி. வெங்கடேசன் கண்டனம்!

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. அதன் முதல் நிலை தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், எஸ்சி , ஓபிசி பிரிவினருக்கு 61.75%, எஸ்டி பிரிவினர்களுக்கு 57.25%, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 47.75% என்ற வகையில் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு இருந்ததற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஸ்டேட் வங்கி முதல் நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020லிருந்து இந்த பிரச்சினை குறித்து நிதி அமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறேன். அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது.

27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக எனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன.

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன. ஆகவே பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும். மீண்டும் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால் இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓபிசி, எஸ்சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆப்-க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீடு நெறி முறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும்.இப்பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

வியாழன் 23 செப் 2021