மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

பொது இடங்களில் குப்பை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

பொது இடங்களில் குப்பை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைச் சுத்தமாகவும், தூய்மையாகவும், அழகாகவும் மாற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. க்ளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நேற்று (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றின் ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது.

எனவே, சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019இன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைக் கொட்டும் தனிநபர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களின் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், சாக்கடை மற்றும் திரவக் கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்களின் மீது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மாநகராட்சியில் பொது இடங்களிலும் நீர்வழித் தடங்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகளைக் கொட்டும் நபர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 22 செப் 2021