மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

சென்னை: குடிநீர் விநியோகம் அதிகரிப்பு!

சென்னை:  குடிநீர் விநியோகம்  அதிகரிப்பு!

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு உள்ளதால் சென்னைக்கு தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவு 975 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் அளவில் இது அதிகபட்ச அளவாகும்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஐந்து ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 13,222 மில்லியன் கன அடி (13.22 டிஎம்சி) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது இந்த ஏரிகளில் 10,477 மில்லியன் கன அடி (10.47 டிஎம்சி) தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 79.24 சதவிகிதமாகும்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து 247 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது 2,639 மில்லியன் கன அடி, அதாவது 81 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. ஏரிக்குத் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 4,964 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. ஆனால், தற்போது இரண்டு மடங்காக 10,477 மில்லியன் கன அடி (10.47 டி.எம்.சி.) தண்ணீர் இருக்கிறது. இதையடுத்து சென்னையில் தினசரி குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குழாய்கள் மூலம் 897.26 மில்லியன் லிட்டரும், லாரிகள் மூலம் 32.70, தொழிற்சாலைகளுக்கு 21.66, நகராட்சிகளுக்கு மொத்தமாக 23.76 உள்பட மொத்தம் 975.38 மில்லியன் லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் அளவில் இது அதிகபட்சம் ஆகும். ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக இருப்பதால் தினசரி தண்ணீர் விநியோகம் படிப்படியாக 1,000 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 21 செப் 2021