மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும்! 

பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும்! 

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிரில் வரும் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது எனவும் கூறி ஒன்றிய அரசு பம்பர் பொருத்தத் தடை விதித்தது.

ஒன்றிய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில், பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் லெனின் பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அலுவலர்களின் வாகனங்களில் கூட தடைசெய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து ஆணையரக அலுவலர்கள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு மிக அவசியம். பம்பர் பொருத்திய வாகன ஓட்டுநர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பொதுமக்களின் நலன் கருதியே ஒன்றிய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினர்.

வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். ஒன்றிய அரசின் இந்த உத்தரவை மாநில அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 21 செப் 2021