மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

நாடு முழுவதும் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட முடியாது!

நாடு முழுவதும் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட முடியாது!

நாடு முழுவதும் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேவேளையில் ஆன்லைனிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களை வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், ”பெரும்பான்மையான மாணவர்களின் உணர்வின் ஒட்டுமொத்த குரலாக இந்த வழக்கை தொடுக்கிறேன். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்கள் ஆன்லைன் வழிக் கல்வியைப் பெற வசதியில்லாத நிலையில் உள்ளனர். வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே செல்போன், லேப்டாப் மூலம் கல்வி கற்க முடியும். ஆனால் ஏழைகள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களால் எவ்வாறு கல்வியைக் கற்க முடியும்? பள்ளிகளை மீண்டும் திறக்காதது மாணவர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், பாகுபாட்டையும் வளர்த்தெடுக்கிறது. அதனால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(செப்டம்பர் 20) நீதிபதிகள் சந்திரசூட், நாகரத்னா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள்,” பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து,மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தவகையில் கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. இதற்கிடையில் மூன்றாவது அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாநில அரசும் பள்ளிகள் திறப்பு குறித்து யோசித்து முடிவெடுக்கின்றன. அனைத்து மாநிலங்களும் பள்ளிகளை திறக்க ஆசைப்படுகின்றன. அதேவேளையில் கொரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், இளம் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது சிக்கலான ஒன்று. அதுமட்டுமில்லாமல், மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு விதிமுறைகளை வகுத்திருப்பார்கள். மாநில அரசுகளின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது. எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தி உத்தரவிட முடியாது. இதுகுறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்குத் தான் முழு உரிமை இருக்கிறது” என்று நீதிபதிகள் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த மனு விளம்பரத்திற்காக போடப்பட்டது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் குழந்தைகள் இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. உங்களின் நோக்கம் புரிகிறது. ஆனால் மாணவர்களின் நலனும் முக்கியம்” என்று கூறினார்.

மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், மனுதாரரை படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறும், நீதிமன்றத்திற்கு இது போன்ற விஷயங்களுக்காக அணுகுவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

திங்கள் 20 செப் 2021