மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

11.45 மணி நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

11.45 மணி நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் 11.45 மணி நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று(செப்டம்பர் 19) இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 20,000 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 1,600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்னையில் சைதாபேட்டை அருகே தடாக நகர் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதுபோன்று, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உப்பிலிபாளையம், கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. இங்கு, முதல் தவணை தடுப்பூசியை 75 சதவீதத்திற்கு அதிகமானோரும்,இரண்டாவது தவணை தடுப்பூசியை 25 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 4,20,53,900 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பிற்கு ஏற்றவாறு இன்றைய கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திராவில் தொற்றுக் கூடிக்கொண்டே செல்லும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சதவீதம் 1.1 ஆக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சென்னையில் 34 சதவீதம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, ”தடுப்பூசிதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம், சென்னை இந்த முயற்சியில் வெற்றிநடை போடுகிறது. இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அரசுக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலத்தையும் திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த ஆட்சியில் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்” என்று கூறினார்.

இந்நிலையில், தடுப்பூசி முகாம்களில் 11.45 மணி நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

-வினிதா

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

ஞாயிறு 19 செப் 2021