மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே மூன்றாவது அலை அமையும் என்று தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது.அதேசமயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற மாதங்களில் பண்டிகைகள் அதிகளவில் கொண்டாடப்பட இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், “ இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகமாக கூடுகின்ற சமூக மற்றும் மதக் கூட்டங்களின் மூலம் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மைக் கொண்டது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகவும் கட்டாயமாகவும் பின்பற்ற வேண்டும். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாம் நல்ல சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால், வரும் சில வாரங்கள் பண்டிகை காலம் என்பதால், மக்கள் அதிகளவில் கூட்டம் கூடி, முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தவறினால் பெரியளவில் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும். நாடு இதே நிலையில் இருக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் இரண்டு-மூன்று மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே மூன்றாவது அலை அமையும்” என்று கூறினார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா,” நாட்டில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரியளவிலான கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள்தான் மூன்றாவது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 18 செப் 2021