மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டைம் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம் பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டில் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவன சிஇஓ அதார் பூனாவாலா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது குறித்து டைம் இதழின் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் காரணங்கள்...

மோடி

இந்தியா சுதந்திரம்பெற்ற 74 ஆண்டுகளில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு மூன்றாவது முக்கியத் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இருப்பினும், இந்தியாவை அதன் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலக்கியிருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். சிறுபான்மையினர், பத்திரிகையாளர் மீது நடந்த தாக்குதல்கள் மோடி மீது இந்த விமர்சனத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி, சோசலிசப் பொருளாதாரக் கொள்கையில் இருந்தவந்த இந்தியாவை, முதலாளித்துவ எதிர்காலத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார் எனவும், கொரோனா இரண்டாவது அலையை சரிவர கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என மோடி குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மம்தா பானர்ஜி

இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் மற்ற பெண்களைப்போல் இல்லை மம்தா. ஒருபோதும் இவர் ஒருவரின் மனைவி, தாய், மகள், உறவினர் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை. மம்தா, கடுமையான வறுமைச் சூழலிலிருந்து வந்தவர். சுருக்கெழுத்துப்பணி, பால் விற்பனை செய்வது போன்ற வேலைகள் செய்தே தன் குடும்பத்தை வழிநடத்தியவர். மம்தாவைப் பொறுத்தவரை, அவர் கட்சியை தலைமையேற்று நடத்தவில்லை. அவர்தான் ஒட்டுமொத்த கட்சியாகவே இருக்கிறார். ஆணாதிக்கச் சமூகத்தில் தனது திறமையை நிரூபித்தவர்.

2021 தேர்தலில், பாஜகவிடம் பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் இருந்தபோதிலும், மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் வென்று தனது முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்தார். வெல்ல முடியாதவராகத் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி விரிவாக்க லட்சியத்திற்கு எதிராக மம்தா ஒரு கோட்டை போல் நின்றார். தேசிய அளவில் மோடியை எதிர்கொள்வதற்கு ஏதேனும் கூட்டணி அமைந்தால், மம்தா பானர்ஜி அதில் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது உறுதி என டைம் இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதார் பூனாவாலா

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தலைவர்தான் அதார் பூனாவாலா. இவர் 2021ஆம் ஆண்டுக்குள், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1.1 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்று டைம் இதழ் கருத்து தெரிவித்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். தலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பர்தாருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 17 செப் 2021