பூஸ்டர் டோஸ் திட்டம் தற்போதைக்கு இல்லை!

public

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் தற்போது ஒன்றிய அரசிடம் இல்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒருமுறை நாட்டில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்படி டெல்லியில் நேற்று (செப்டம்பர் 16) ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “இந்தியாவில் வயது வந்தோரில் 20 சதவிகிதம் பேர் தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டனர். 62 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் ஒரு டோஸையாவது செலுத்தியுள்ளனர். மேலும், 99 சதவிகித சுகாதாரப் பணியாளர்கள் முதல் டோஸையும், 82 சதவிகித சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது டோஸையும் எடுத்துள்ளனர். முன்களப் பணியாளர்கள் அனைவரும் முதல் டோஸ் போட்ட நிலையில், அவர்களில் 78 சதவிகிதத்தினர் இரண்டாவது டோஸைப் போட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 68 சதவிகிதம் கேரளாவில் பதிவாகிறது. அங்கு, 1.99 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மிசோரம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 64 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் 5 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. தொற்று அதிகமுள்ள இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “ஒரு விஷயத்தை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் போடுவது தொடர்பாக ஒன்றிய அரசின் அறிவியல் விவாதங்களிலோ, பொது சுகாதார வெளியிலோ தற்போதைக்கு இல்லை. தற்போது இருக்கக் கூடிய இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்த வேண்டும். அதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது, கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்பதுதான். வருகிற காலங்களில் அதிக பண்டிகைகள் கொண்டாட இருப்பதால் மக்கள் கவனமாக செயல்பட வேண்டும். கொரோனா பரவுவதற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிடக் கூடாது” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *