மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் கொண்டு வருவது தொடர்பாக நாளை (செப்டம்பர் 17) நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்கீழ் தற்போது 5, 12, 18, 28 என நான்கு அடுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், சில பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகிய ஐந்து பொருட்களும் அடங்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய, மாநில அரசுகளின் வரிகள். ஒன்றிய அரசின் கலால் வரியும், மாநில அரசுகளின் மதிப்புகூட்டிய வரியும்தான் பெட்ரோல் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒன்றிய அரசு உற்பத்தி வரியைக் குறைக்க மறுத்து வருகிறது. இதேபோன்று பல மாநில அரசுகளும் மதிப்பு கூட்டிய வரியைக் குறைக்க மறுக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை. பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சரக்கு, சேவை வரிவிதிப்பின்கீழ் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், இவற்றை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாளை (செப்டம்பர் 17) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் முதன்முதலாக காணொலிக் காட்சி வழியாக இன்றி நேரடியாக நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி இவற்றை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவந்தால் ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். தங்கள் வருமானத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிற அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனென்றால், ஒன்றிய, மாநில அரசுகள் இந்த வரி வருவாயை பெருமளவில் கொண்டுள்ளன. இவற்றையே நம்பியும் உள்ளன.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல்மீது ரூ.32.80-ம், டீசல் மீது ரூ-31.80-ம் ஒன்றிய அரசு உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு தருவதில்லை. ஆனால் ஜிஎஸ்டி என்றால் இரு தரப்பும் தலா 50 சதவிகிதம் என்ற அளவுக்கு சரக்கு, சேவை வரியை பகிர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 16 செப் 2021