மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

நீட்: மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

நீட்: மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

செங்கல்பட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் அனுசியா(17) சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வை அனுசியா, ஆவடி நீட் தேர்வு மையத்தில் எழுதியுள்ளார். முதல் முறையாக நீட் தேர்வை எதிர்கொண்ட அனு, எங்கே நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பதற்றத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுசியா தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 40 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அனுசியாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது, மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை, ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கத் தமிழக சுகாதாரத் துறை தனி மையம் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை முடிவு சரியானதல்ல என்று அரசியல் தலைவர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

வியாழன் 16 செப் 2021