மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

நேரடி வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

நேரடி வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை!

நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம். விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாதீன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நேரடி வகுப்புகளுக்கு விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்த்து. ஆனால், சில பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நேரத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்துவது கொரோனா பரவலை அதிகப்படுத்தும்.

எனவே, தமிழகத்தில் 9 முதல்12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தவும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 15) நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல பள்ளிகள் மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என்று வற்புறுத்துகின்றன என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவர்களை நேரடி வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்தப் பள்ளிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 16 செப் 2021