மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

மீண்டும் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமா?

மீண்டும் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுமா?

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டன. வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "அவசர நிலையின்போது மாநிலப் பட்டியலில் இருந்த காடுகள், கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

மாநில அரசு பட்டியலில் இருந்து கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே, தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் ஒன்றிய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில மக்களின் கல்வித்தேவை, விருப்பம் ஆகியன சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அதனால் மீண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு நேற்று (செப்டம்பர் 14) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இதுதொடர்பாக அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வந்தது தவறு என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும். மாநிலங்களுக்கு ராணுவம், அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

பின்னர், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், இந்த மனு குறித்து எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 15 செப் 2021