மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்!

public

தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்தது. அதன்விளைவாக தற்போது அதிகமான மக்கள் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரேநாளில் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அன்றைய நாளின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி கூடுதலாக 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த சாதனைக்கு தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், தடுப்பூசி முகாம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும், தடுப்பூசி முகாம் குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இன்னும் டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து , வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 15) சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *