மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

உலகிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருக்கும் ஓலா நிறுவனம், அதில் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

இது முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் தொழிற்சாலையாக இருக்கும் என்று ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஓலா நிறுவனம், பெண்களின் பொருளாதாரத்துக்கு கைக்கொடுக்கும் விதமாக எடுத்துள்ள இந்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அமையவிருக்கும் இந்தத் தொழிற்சாலைக்காக கடந்த ஆண்டே ஓலா நிறுவனம் 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓலா எஸ்1 மின்சார வாகனத்தை ஓலா வெளியிட்டது. எஸ்1 ரூ.99,999-க்கும் மற்றும் எஸ்1 ப்ரோ ரூ.1,29,999-க்கும் விற்பனையாகும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்சார்பு இந்தியாவை உருவாக்க தற்சார்பான பெண்கள் தேவை" எனப் பதிவிட்டிருந்தார். மேலும் பெண் பணியாளர்களின் வீடியோவை வெளியிட்டிருந்த பவிஷ், “அமையவிருக்கும் இந்த தொழிற்சாலை முழுக்க முழுக்கப் பெண்களால் இயங்கவிருக்கிறது. 10,000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களுடன், உலகிலேயே அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட ஆல்-விமன் ஃபேக்டரி (all - women factory) ஆக இது இருக்கும். உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையாகவும் இருக்கும். எங்கள் முதல் பேட்ச் பெண் பணியாளர்களைச் சந்தித்தோம். அவர்களது ஈடுபாடு எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பணியில் சேரும் பெண்களுக்குக் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டுக்காகக் குறிப்பிடத்தக்க முதலீடு செய்துள்ளேன். வருங்காலத்தில் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு வாகனத்திற்கும் அவர்கள்தான் பொறுப்பு. பெண்களுக்குப் பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளை வழங்கும்போது அவர்களின் குடும்பமும், சுற்றமும், மொத்த சமூகமும் மேம்படும். பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவது நாட்டின் ஜிடிபியை 27% உயர்த்தும் என ஆய்வுகள் கூறுகின்றன" என்றும் பவிஷ் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு வெறும் 12 சதவிகிதம்தாம் உள்ளது. இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற பெண்களை உற்பத்தி துறையில் அதிகம் ஈடுபடுத்த வேண்டியது அவசியம். உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக அமைய உள்ள ஓலாவின் தொழிற்சாலை, ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருக்கும். சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பின்னர் உறுபத்தி 20 லட்சமாக உயர்த்தப்படும். உற்பத்தி முழுவதுமாக உயர்த்தப்பட்டால் ஒரு கோடி வாகனங்கள் வரை தயாரிக்கும் தொழிற்சாலையாக ஓலா இருக்கும்.

இது மொத்த உலக உற்பத்தியில் 15 சதவிகிதமாகும். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க இருந்த விற்பனை தொழில்நுட்ப பிரச்னை காரணமாக 15ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வாகனத்தை வழங்குவதில் எந்தச் சிக்கலும் உண்டாகாது என்றும் பவிஷ் கூறியுள்ளார்.

வியாபார ரீதியாக மட்டும் இன்றி சமூக நலத்தையும் கருத்தில்கொண்டு ஓலா நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

-ராஜ்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 15 செப் 2021