மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

இனி நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்தில் செல்ல முடியாது!

இனி நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்தில் செல்ல முடியாது!

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டராக அதிகரித்து ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவருக்கு, 90 சதவிகித ஊனம் ஏற்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சம்பந்தப்பட்டவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவருக்கான இழப்பீட்டு தொகையை 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

மேலும், அந்த உத்தரவில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று ஒன்றிய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை மேம்பாட்டையும் இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில்தான் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வேகத்தை அதிகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம் 2014ஆம் ஆண்டு அறிவிப்பின்படி வாகனங்களுக்கு 60- 100 கி.மீ இடைவெளியில் வேகத்தை நிர்ணயித்து, அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக சாலை விபத்துகள் அதிகமாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஒரு விபத்தில் 4 முதல் 6 பேர் வரை உயிரிழக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 13 முதல் தற்போதுவரை கிட்டதட்ட ஆறு முதல் ஏழு சாலை விபத்துக்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 14 செப் 2021