மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு: தொழிலாளர்களின் கதி?

உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு: தொழிலாளர்களின் கதி?

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கும் நிலையில் ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துவதால் சென்னை யூனிட்டில் சுமார் 4,000 பேரும் குஜராத் யூனிட்டில் சுமார் 4,500 பேரும் பணிபுரிகிறார்கள். இந்தத் தொழிலாளர்களின் கதி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் 1995ஆம் ஆண்டு தமிழகத்தில் தனது தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு, சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை ஃபோர்டு ஆரம்பித்தது. அங்கு, 1998இல் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு சனாந்த் என்ற இடத்தில் தனது இரண்டாவது தொழிற்சாலையை ஃபோர்டு நிறுவியது. சனாந்த்தில் உள்ள தொழிற்சாலை அதி நவீன வசதிகளைக் கொண்டது. அங்கு, உலகத் தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளன.

தற்போது, இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது என்றும், இனிமேல் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்றும் முடிவெடுத்த ஃபோர்டு நிறுவனம், அதைத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஏற்றபடி, குறைந்த தயாரிப்பு செலவில் கார்களை உருவாக்க முடியாததால் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கவில்லை என்றும், அதனால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, ஃபோர்டும் இந்தியாவில் தனது கார் தயாரிப்பை நிறுத்தியிருக்கிறது. தமிழ்நாடு, குஜராத் என இரண்டு யூனிட்களிலும் சேர்த்து ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 80,000 கார்கள் மட்டுமே, அதாவது வெறும் 20 சதவிகிதம் கார்களே சமீபகாலமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாததுதான் உற்பத்தியை நிறுத்தியதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

“இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்தும், எங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகிவிட்டன. புது வாகனங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர்களும் குறைந்து விட்டார்கள்” என்று ஃபோர்டு இந்தியாவின் தலைவர் ஜிம் ஃபேர்லி கூறியுள்ளார்.

சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு வைத்து கார்களை ஃபோர்டு நிறுவனம் தயாரிப்பதாக ஒரு செய்தி வெளியானது. 2019ஆம் ஆண்டு அதற்கான ஒப்பந்தம் தயாரானது. ஆண்டுக்கு 4 லட்சம் கார்களைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் தயாரிக்கப்பட்டது. என்ன காரணத்தாலோ ஃபோர்டு - மஹிந்திரா ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராமல் போனது. ஒப்பந்தம் முறிந்தது.

கார் தயாரிப்பை ஃபோர்டு நிறுத்தினாலும் டீலர்ஷிப்கள், சர்வீஸ் சென்டர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு ஃபோர்டு கார் உரிமையாளராக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. காருக்கான வாரன்ட்டி, சர்வீஸ், உதிரிபாகங்கள் இறக்குமதி போன்றவற்றுக்கு ஃபோர்டு நிச்சயம் பொறுப்பேற்குமாம்.

ஆனால் ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை யூனிட்டில் சுமார் 4,000 பேரும் குஜராத் யூனிட்டில் சுமார் 4,500 பேரும் பணிபுரிகிறார்களே, அவர்களின் கதி என்ன என்பதுதான் அடுத்த கட்ட கேள்வி.

இது குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் பணியாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “1995இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 1998இல் மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தனர். பிறகு, படிப்படியாக சுமார் 4,000 ஊழியர்களாக அதிகரித்துவிட்டனர். அவர்களில் 1,300 பேர் ஒயிட் காலர்ஸ். 2,600-க்கும் மேல் ஃப்ளூ காலர்ஸ்.

வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். ஆனால், இந்த முறை ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஊதிய உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அப்போதே ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. இப்போது அது நடந்துவிட்டது. இரண்டு பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஃபோர்டு நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்த நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளில் போட்ட முதலீட்டைக் காட்டிலும் பல மடங்கு லாபத்தை எடுத்துப்போய்விட்டது. தற்போது இங்கு இருக்கும் சொத்துகளின் மதிப்பே இரண்டு பில்லியன் டாலரைவிட அதிகமாக இருக்கும்.

எங்கள் உழைப்பில் பெரும் லாபத்தை சம்பாதித்து எடுத்துச்சென்றுவிட்டு இன்றைக்கு வேறு யாருக்கோ இந்த நிறுவனத்தை கைமாற்றிவிட முயற்சி செய்வது மிகவும் தவறானது” என்கின்றனர்.

தமிழ்நாட்டில் 4,000 பேரையும் குஜராத்தில் 4,500 பேரையும் வி.ஆர்.எஸ் கொடுத்து அனுப்பப்போகிறார்கள் என்பதே கடைசியாக கிடைத்துள்ள தகவல்.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 13 செப் 2021