மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

பனை மரங்களை வளர்த்து சாதனை படைத்துள்ள பாண்டிக்குடி!

பனை மரங்களை வளர்த்து சாதனை படைத்துள்ள பாண்டிக்குடி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் 60 ஏக்கர் குளத்தில் ஆயிரக்கணக்கான பனை மரங்களை பொதுமக்கள் வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.

பனை மரங்களால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வறட்சி ஏற்படாமல் இருக்கும் என்பதால் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பனை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் வளர்ந்த பனை மரங்களை செங்கற்சூளைகளுக்கு விறகுக்காக சிலர் வெட்டி வருகிறார்கள்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிராக போராடி வந்தனர். இந்த நிலையில் பனை மரங்களை வெட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள சுமார் 60 ஏக்கர் குளத்தில் பனை விதைகளை விதைத்து ஆயிரக்கணக்கான பனை மரங்களை வளர்த்துள்ளனர் கிராம மக்கள்.

இந்த நிலையில் இவற்றைப் பார்வையிட்டு பாதுகாத்து, பராமரித்து வரும் பொதுமக்களை பாராட்டிய மாநில சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம், “தமிழகத்தின் மாநில மரமான பனையைப் பாதுகாப்பதற்கு நிகழாண்டில் 70 லட்சம் பனை விதைகளை விதைக்கவும், பனை மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பனை மரம் மட்டும்தான் ஹைபிரிட் செய்யப்படாத மரமாக இருக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் துறையின் சார்பில் ரூ.50 கோடியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பனை மரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாண்டிக்குடியில் உள்ள பனந்தோப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகளைச் சேகரித்து ஆலங்குடி தொகுதி முழுக்க நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பனந்தோப்பு பனைப் பூங்காவாக மாற்றப்படும். மேலும், பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக ரூ.7 லட்சத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், பனையிலிருந்து பனங்கற்கண்டு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு, அதைத் தயாரிப்பதற்கான பயிற்சியும் இப்பகுதி மக்களுக்கு அளிக்கப்படும்.

இதுபோன்று, பனை மரங்களைப் பாதுகாத்து வருவோருக்குத் தமிழக அரசின் சார்பில் விருது அளிப்பதற்காக முதல்வர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்த பனை வளர்ப்பு குறித்து மகாகவி பாரதி நற்பணி மன்றத்தைச் சேர்ந்த திருப்பதி, “எனக்கு 26 வயது இருக்கும்போது ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய தலைவர்கள் பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கி ஏதாவது நலப்பணிகள் செய்வார்கள். அதேபோல் தான் பாண்டிக்குடி கிராமத்தில் மகாகவி பாரதி நற்பணி மன்றத்தைத் தொடங்கி 60 ஏக்கர் பரப்பளவுள்ள பாண்டிக்குளத்தில் பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டோம். இளைஞர்களும் முன்வந்தார்கள்.

ஊர் ஊராக சென்று பனை விதை சேகரித்து சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பனை விதைகளை விதைக்கச் செய்தோம். இப்படியே சுமார் 37 வருடங்களில் ஆயிரக்கணக்கான பனைமரக்காட்டை உருவாக்கிவிட்டோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இப்போது நாங்கள் நட்ட பனை மரங்களில் இருந்தே விதை சேகரித்து மீண்டும் விதைக்கிறோம். இப்போதைய இளைஞர்களும் ஆர்வமாக பனை விதை விதைக்கிறார்கள். பனைமரக்காடு உருவான பிறகு பல உயிரினங்களும் இங்கே வாழ்கிறது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்களில் நுங்கு தேவையும் பூர்த்தியாகிறது. இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வந்து பனை விதை விதைத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

சத்தமில்லாமல் பல ஆயிரம் பனைமரங்களோடு பனைமரக்காட்டை உருவாக்கிய மகாகவி பாரதி நற்பணி மன்றத்தினரை இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

-ராஜ்

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

திங்கள் 13 செப் 2021