மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

நீட் மசோதா நிறைவேறியது: அதிமுக ஆதரவு - பாஜக வெளிநடப்பு!

நீட் மசோதா நிறைவேறியது: அதிமுக ஆதரவு - பாஜக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா பாஜக நீங்களாக மற்ற கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது.

நீட் தேர்வு காரணமாகச் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) காலை சட்டப் பேரவை கூடியதும் நீட் தேர்வு தொடர்பான விவாதம் தொடங்கியது. அப்போது மாணவர் தனுஷ் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் நீட் விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்தார்.இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான விவாதம் பிற்பகலில் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் போராட்டம் நடத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற அனுமதிக்கவில்லை என்றும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாகத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது என்றும். ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மாநில அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட முன்வடிவை வரவேற்பதாகவும் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசியல் பாகுபாடு பார்க்காமல் சட்டப்பேரவையில் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தோம். பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் இந்த சட்ட முன்வடிவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என்றார்.

“நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவ கல்வியில் சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி என்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட்தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

அதோடு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமானால் நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என்று பாஜகவுக்கு அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “கூட்டணியிலிருந்தாலும் அதிமுகவின் முடிவு வேறு. பாஜகவின் முடிவு வேறு. நீட் தேர்வைப் பொருத்தவரை நாளுக்கு நாள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது” என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”எத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை விட 15 மாணவர்கள் உயிரிழந்தார்கள் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “எந்த தரவுகளை வைத்தாலும் அதனை ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் பணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். எவ்வளவு பேர் பல முறை நீட் தேர்வு எழுதியுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீட் விளக்கு சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

அதே சமயத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஆதரவு தெரிவித்தது, மேலும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த சட்ட முன்வடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து நீட் விலக்கு சட்ட முன்வடிவு ஒருமனதாகச் சட்டப்பேரவையில் நிறைவேறியதாகச் சபாநாயகர் அறிவித்தார்

-பிரியா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 13 செப் 2021