ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தள்ளிவைப்பு!

public

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்களை எடுக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், ”தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது.

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு ஆணை 72ன் படி ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்திற்குள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில், அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆபத்தான மூலப்பொருள்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை எண் 83ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசின் அனுமதியோடு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் நடைபெற்றது. ஆக்சிஜன் உற்பத்தி பணி முடிந்தபிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.

தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(செப்டம்பர் 13) நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசு தரப்பில் கூடுதலாக 2 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *