மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

சிறுமி பலி : 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

சிறுமி பலி : 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

ஆரணியில் உள்ள 7 ஸ்டார் என்ற ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தையடுத்து, அந்தப்பகுதியில் உள்ள மற்ற உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் 7 ஸ்டார் என்ற பெயரில் ஹோட்டல் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிட்டு செல்வது வழக்கம். அதுபோன்று கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோஷினி ஆகிய நான்கு பேரும் 7 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணியும், தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தியும்,மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நால்வரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஆனந்த், பிரியதர்ஷினி, சரண் ஆகிய மூன்று பேரும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். லோஷினிக்கு மட்டும் ஆரணியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் அதேநாளில் அதேநேரத்தில் சாப்பிட்ட 39 பேருக்கும் வாந்தி,மயக்கம், வயிற்றுபோக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதனால், இவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உயிரை காவு வாங்கிய 7 ஸ்டார் ஹோட்டலை பூட்டி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உணவக உரிமையாளர் அம்ஜித் பாஷாவையும், சமையல்காரர் முனியாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஆரணியிலுள்ள மற்ற அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான மூலப் பொருட்களையும் நீண்ட நாட்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் மைனஸ் 18 டிகிரி வெப்பநிலை கொண்ட ஃபரீசரில் வைக்க வேண்டிய இறைச்சியை சில உணவகங்களில் சாதாரண வகை ஃப்ரீசரில் வைத்திருந்தார்கள். அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவகங்களில் தினசரி புதிதாக வாங்கிய இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இறைச்சிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பதப்படுத்தி வைக்க அதற்கென உள்ள ஃப்ரீசர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 11 செப் 2021