மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

சிறந்த கல்வி நிறுவனம்: ஹாட்ரிக் அடித்த சென்னை ஐஐடி!

சிறந்த கல்வி நிறுவனம்: ஹாட்ரிக் அடித்த சென்னை ஐஐடி!

இந்தியாவின் மிகச் சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும் பொருட்டு கடந்த 2015 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) என்ற ஒன்றிய அரசின் அமைப்பு கல்வி நிறுவனங்களின் தரத்தை பகுப்பாய்வு செய்து தரவரிசைப்படுத்தும்.

இதில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கட்டடக்கலை கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படும். கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பட்டப்படிப்பு, உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஆறாவது முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(செப்டம்பர் 9) வெளியிட்டார்.

அதில், ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளிலும் முதலிடத்தைப் பிடித்த சென்னை ஐஐடி 2021ஆம் ஆண்டிலும் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. அந்த வகையில் சென்னை ஐஐடி ஹாட்ரிக் அடித்துள்ளது.

ஐஐஎஸ்சி பெங்களூரு இரண்டாம் இடத்தையும், ஐஐடி மும்பை மூன்றாவது இடத்தையும், ஐஐடி டெல்லி நான்காம் இடத்தையும், ஐஐடி கான்பூர் ஐந்தாம் இடத்தையும், ஐஐடி காரக்பூர் ஆறாம் இடத்தையும் பிடித்துள்ளன.

பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் கோயம்புத்தூர் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் திருச்சி என்ஐடி ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலாண்மை தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை.

சிறந்த கல்லூரிகள் தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி மூன்றாம் இடத்தையும், கோயம்புத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆறாம் இடத்தையும், சென்னை பிரசிடென்சி கல்லூரி ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் வேலூரிலுள்ள சிஎம்சி கல்லூரி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

-வினிதா

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வியாழன் 9 செப் 2021