சென்னையில் செப்.12ல் 1,600 தடுப்பூசி முகாம்கள்!

public

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 12ஆம் தேதி 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசின் தொடர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் முதியோர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்துதல், குடிசைப் பகுதிகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 43,62,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 29,89,064 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 13,73,689 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் தீவிர தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 8) சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னை மாநகராட்சி பகுதிகளில் செப்டம்பர் 12ஆம் தேதி 1,600 தீவிர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்படும். இதில் 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தீவிர தடுப்பூசி முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 3,000 மலேரியா தடுப்பு பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் பல அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தொற்று பரவாமல் தடுக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 10,000 தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரேநாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *