மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும்!

தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும்!

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள், பணியாளர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் எச்சரித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால், தடுப்பூசியை அனைவரும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மக்களிடம் நேரடியாக தொடர்புக் கொள்ளும் தொழிலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் நகை,துணி, மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 8) திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி ஊழியர்களுடன் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி ஆணையர் ஏகராஜ், “திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசிப் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் வியாபாரிகள் காட்ட வேண்டும்.

இதுவரை தடுப்பூசி போடதவர்கள் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்தக் கடையை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை தவிர்க்கவும், வியாபாரிகள் தங்களது பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது” என்று கூறினார்.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

புதன் 8 செப் 2021