மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு: ஒன்றிய அரசுக்கு உத்தரவு!

public

யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 8) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.

ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவலக மொழியான ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களை கவனித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து ஒன்றிய அரசு எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *