மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

சாத்தான்குளம் கொலை வழக்கு: யாருக்கும் ஜாமீன் கிடையாது!

சாத்தான்குளம் கொலை வழக்கு: யாருக்கும் ஜாமீன் கிடையாது!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் ஜாமீன் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரும், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது போலீசார் அவர்களை லத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மீதமுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ரகு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, ரகு கணேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதுபோன்று அதேவழக்கில் சிறையில் இருக்கும் ஸ்ரீதரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீதர் மற்றும் ரகுகணேஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் ” பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையின்போது உயிரிழக்கவில்லை. அவர்கள் வீசிங் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலினால்தான் உயிரிழந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில்தான் அவர்கள் இறந்தனர். இவ்வழக்கில் வெளிப்படையான தன்மை இல்லை. எனவே வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 7) நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில், அவர்கள் ஏன் போலீஸ் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை? அவர்கள் உடலில் காயம் இருந்ததாக கூறும் பிரேத பரிசோதனையின் பின்னணி என்ன? அவர்களை யார் காயப்படுத்தினார்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில், ”இந்த சம்பவத்தில், காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண் அதிகாரிகளே இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இன்னும் நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அவர்கள் விசாரிக்கப்படும் வரை, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. தற்போதைய சூழலில் உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ளவும் விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.

வழக்கை ஒத்திவைப்பது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த நீதிபதிகள், ‘நாங்கள் ஜாமீன் வழங்க முடியாது. அப்படியிருந்தும் உங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு தேவைதானா? அப்படி நாங்கள் ஒத்திவைத்தால், நீங்கள் கூடுதல் நாள்கள் சிறையில் இருக்க நேரிடும். அதற்கு உங்களுக்கு சம்மதமா?’ எனக் கேட்டனர்.

இதற்கு அவர்கள் வேண்டாம் என்று கூறியதையடுத்து, வழக்கு ஒத்திவைப்பும் நிராகரிக்கப்பட்டது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றக் கோரி ரகு கணேஷ் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 7 செப் 2021