மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

பயிர்க்கடன் தாமதம்: சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை!

பயிர்க்கடன் தாமதம்: சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை!

முக்கியமான நேரத்தில் கைகொடுத்து வந்த பயிர்க்கடன் நடப்பாண்டில் இதுவரை திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைக்காததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு நான்காம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடுமலை அமராவதி அணையில் திருப்தியான நீர் இருப்பு காரணமாக கல்லாபுரம் மற்றும் இதர ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. இரு பாசனப் பகுதிகளிலும் ‘காரிப்’ பருவம் விவசாயிகளின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

இந்த நிலையில் விதை, அடியுரம், இடுபொருட்கள், மருந்து தெளித்தல் உள்ளிட்ட சாகுபடி பணி செலவுக்குப் பயிர்க்கடன் மட்டுமே விவசாயிகளுக்கு முக்கிய உதவியாக உள்ளது. வழக்கமாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக சாகுபடி பணிகளுக்கு முன்பாக பயிர்க்கடன் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்.

விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு சாகுபடி காலத்தில், பயிர்க்கடன் கிடைப்பதுடன், உரமும் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து விளைநிலத்திலுள்ள சாகுபடிக்கு ஏற்ப பயிர் காப்பீடும் செய்யப்படும். இவ்வாறு முக்கிய சீசனில் கைகொடுத்து வந்த பயிர்க்கடன் நடப்பாண்டில் இதுவரை திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

முந்தைய அதிமுக அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதற்கான சான்றிதழ்களும் அப்போதே விநியோகிக்கப்பட்டது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. அதேபோல் நடப்பு சீசனுக்கு, பயிர்க்கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களும் பெறப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “குறித்த நேரத்தில் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் விளைநிலங்களில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. விதை, உரம், தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ள நிலையில் சாகுபடிக்கு பயிர்க்கடன் அவசியமாகியுள்ளது.

பல விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க முடியாமல் முதல் சுற்று பாசனத்தில் விதைப்பை தொடங்காமல் உள்ளனர். இரண்டாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில் விரைவில் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பல்வேறு வழிகாட்டுதல்கள் அரசால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. எனவே பணிகள் தாமதமாகிறது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

-ராஜ்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 6 செப் 2021