மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும்!

சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும்!

சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சம்மேளத் தலைவரும், சென்னையை போல மதுரையிலும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஐந்தில் இருந்து பத்து சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 285 ரூபாயில் இருந்து 320 ரூபாய் ஆகவும், லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 480 ரூபாயில் இருந்து 515 ரூபாய் ஆகவும், கார், ஜீப், வேன் உள்ளிட்டவற்றுக்கு 10 முதல் 15 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சம்மேளனத்தலைவர் சின்னச்சாமி, “தொற்று காரணமாக லாரி தொழில் நசிவடைந்துள்ள நிலையில் டீசல் விலை குறைக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். டீசல் விலை லிட்டர் 68 ரூபாயாக இருந்தபோது லாரி வாடகை உயர்த்தப்பட்டது.

தற்போது டீசல் விலை 95 ரூபாயை எட்டியபோதும் வாடகையை உயர்த்தாமல் தொழில் செய்து வருகிறோம். டீசல் விலை குறையாத நிலையில் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றுவதே இதற்கு தீர்வு" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுரையில் நேற்று (செப்டம்பர் 4) நிருபர்களிடம், “தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் முழுமையான தளர்வுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை போல மதுரையிலும் சுங்கச்சாவடிகளை அகற்ற முதல்வர் முன்வர வேண்டும்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து விரைவில் வணிகர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 5 செப் 2021