மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஓட்ஸ், பிரெட், கார்ன் ஃப்ளேக்ஸ்... ஆரோக்கியமான உணவுகளா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஓட்ஸ், பிரெட், கார்ன் ஃப்ளேக்ஸ்... ஆரோக்கியமான உணவுகளா?

எடை குறைப்பு, நேரமின்மை போன்ற காரணங்களுக்காக மேற்கத்திய பாணியில் காலை உணவுக்கு ஓட்ஸ், பிரெட், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது தானா என்பது பலரில் சந்தேகம்...

ஆனால், “மேற்கத்திய நாடுகளில் இவையெல்லாம் அவர்களின் வழக்கமான உணவுகள் என்பதால் அதிகளவில் பதப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான மேற்கத்திய உணவுகள் அதிகளவில் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. எனவே, அத்தகைய உணவுகளை வாங்கும்போது, அவற்றில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன என லேபிளைப் படிக்கவும். அப்படிச் சேர்க்கப்படுகிற ப்ரிசர்வேட்டிவ்ஸ் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்” என்று எச்சரிக்கும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்,

“உடல் இளைக்க உதவும் என்கிற மாதிரியான கவர்ச்சியான விளம்பரங்களோடு வரும் உணவுகளை அவசியம் தவிர்த்து விடவும். பெரும்பாலான இன்ஸ்டன்ட் உணவுகளில் அதிக சர்க்கரை, அதிக உப்பு அல்லது கொழுப்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்டிருக்கும். லேபிளைப் பார்த்து அதை உறுதிசெய்து கொள்ளலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றை சாப்பிடும்போது ஆரோக்கியமான சில விஷயங்களைப் பின்பற்றலாம். உதாரணத்துக்கு ரோல்டு ஓட்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் ஓட்ஸுக்கு பதில் ஸ்டீல் கட் ஓட்ஸ் பயன்படுத்தலாம். அதில் நார்ச்சத்து அதிகம். அதிகமாக பதப்படுத்தப்பட்டிருக்காது. ஓட்ஸை வெறும் கஞ்சியாகச் செய்து சாப்பிடுவதற்கு பதில் அதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உப்புமாவாகவோ, கடலை மாவு, காய்கறிகள் சேர்த்த தோசை, இட்லி, கட்லெட்டாகவோ ஆரோக்கியமான வெர்ஷனுக்கு மாற்றி சாப்பிடலாம்.

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன் எனும் ஒருவகையான நார்ச்சத்து, ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, எடைக்குறைப்புக்கும் உதவும். ஓட்ஸில் க்ளூட்டன் உள்ளது, இல்லாதது என இரண்டும் கிடைக்கின்றன. எனவே க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதையும் செக் செய்து வாங்கிப் பயன்படுத்தலாம்” என்கிறார்கள்.

மேலும், “பிரெட்டில் பிரதானமாகச் சேர்க்கப்படுவது மைதா. ஆனால், இன்று ஆரோக்கியமான பிரெட் வகைகள் நிறைய கிடைக்கின்றன. வீட்டிலேயேகூட ஆரோக்கியமான பிரெட் தயாரித்துச் சாப்பிடலாம். சிறுதானியங்களில்கூட பிரெட் செய்ய முடியும். பிரெட்தான் சாப்பிடுவது என முடிவெடுத்துவிட்டால் அதையும் ஆரோக்கியமானதாகப் பார்த்து தேர்வு செய்யவும்.

கார்ன்ஃப்ளேக்ஸும் பதப்படுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்ட சத்துகள் சேர்க்கப்பட்டே விற்பனைக்கு வருகிறது. இதையும் லேபிளைப் படித்துப் பார்த்து தேர்வு செய்யவும். கார்ன் ஃப்ளேக்ஸுக்கு பதில் ராகி அவல், நெல் பொரி, சிறுதானிய அவல் போன்றவற்றை பால், பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் கூடுகிறது.

எனவே, என்ன சாப்பிடுகிறீர்களோ... அதை ஆரோக்கியமாக மாற்றிச் சாப்பிடவும். நாகரிகம் என்ற பெயரில், உங்களுக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய தானியங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியமானது” என்று பரிந்துரைக்கிறார்கள்.

நேற்றைய ரெசிப்பி: நூடுல்ஸ் பாம்!

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 5 செப் 2021