மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

பூனையைக் காப்பாற்றியவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்!

பூனையைக் காப்பாற்றியவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்!

மிருகங்களை சித்ரவதை செய்து வீடியோக்கள் வெளியிட்டு மகிழும் நிலையில், கர்ப்பிணி பூனை ஒன்றைக் காப்பாற்றியதற்காக கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட நான்கு பேருக்கு தலா 50,000 திர்ஹாம்கள் அதாவது, இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் அளித்து கௌரவித்துள்ளது துபாய் அரசு.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெளியிட்டார். நான்கு ஆண்கள் சேர்ந்து, இரண்டாவது மாடியில் சிக்கி இருந்த கர்ப்பிணி பூனையை காப்பாற்றும் வீடியோதான் இது.

இதைக் குறிப்பிட்டு, ‘நம் அழகிய நகரத்தில் இது போன்ற காட்சிகளைக் காணும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொண்டாடப்படாத இந்த ஹீரோக்களை யாராவது அடையாளம் கண்டால் சொல்லுங்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

துபாயின் டீரா ஃப்ரிஜ் முராரில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இரண்டாவது மாடியில் சிக்கிக்கொண்ட பூனை விளிம்பில் வந்து நிற்கிறது. பூனையை காக்கும் வண்ணம் நான்கு ஆண்கள், துணி ஒன்றை பிடித்திருந்தனர். திடீரென பூனை குதித்து அவர்கள் விரித்திருந்த வலையில் பாதுகாப்பாக விழுகிறது. பின்னர் எழுந்து நடந்து செல்கிறது.

இதை, அந்த நான்கு பேரில் ஒருவரான ரஷீத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அந்தப் பூனை அமைதியாகச் சாப்பிடும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு, பூனை நலமாக இருப்பதாகவும் கூறினார். நண்பர்களான அந்த நான்கு பேரையும் துபாய் போலீஸார் அடையாளம் கண்டு அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியாளரின் ட்வீட்டை தொடர்ந்து பூனையைக் காப்பாற்றிய நான்கு பேர், மொரொக்கொவைச் சேர்ந்த வாட்ச்மேன் ஹர்ஷப், பாகிஸ்தானைச் சேர்ந்த சேல்ஸ் மேன் அதிஃப் மெஹ்மூத், கேரளாவைச் சேர்ந்த நாசர் மற்றும் மளிகைக் கடை வைத்திருக்கும் முகமது ரஷீத் என்பது தெரிய வந்தது.

அரசு கௌரவத்தைப் பெற்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய ரஷீத், “கர்ப்பிணி பூனை இந்தத் தெருவில் அதிகம் உலாவுவதனால் இங்கு இருக்கும் அனைவருக்கும் அவளை தெரியும். ஆனால் அவள் இரண்டாவது மாடியின் பால்கனியில் மாட்டிக்கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. நாங்கள் காப்பாற்றினோம்” எனக் கூறியுள்ளார்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 4 செப் 2021