மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நான்கு நீதிபதிகள்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நான்கு நீதிபதிகள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப நான்கு வழக்கறிஞர்களின் பெயரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், பஞ்சாப் ஹரியானா, கேரளா, சத்தீஸ்கர், அசாம் ஆகிய 12 மாநில உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கு 68 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதற்காக உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதிவரை ஆலோசனை நடத்தியது.

இதில் மொத்தம் 112 பேரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இறுதியில் பார் கவுன்சிலில் இருந்து 44 பேர், நீதித்துறையிலிருந்து 24 பேர் என மொத்தம் 68 பேரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதிகளின் பெயர் பரிந்துரையில் 10 பெண் நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் மிசோரத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த நீதிபதி மரில் வான்குங் என்பவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மிசோரத்திலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதிக்காக தேர்வாகும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.

அதுபோன்று, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமாக 75 நீதிபதிகள் வரை பணியமர்த்தலாம். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எம். சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது. இதனால் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 19ஆக அதிகரித்தது.

தற்போது கொலிஜியம் பரிந்துரை செய்த நான்கு பேரையும் நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர், ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயரும்.

வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவர்கள் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பதவியேற்ற நிலையில்,12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 4 செப் 2021