மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

திருநம்பியாக மாற சிறப்புப் பிரிவு!

திருநம்பியாக மாற சிறப்புப் பிரிவு!

திருநர் சமூகத்தில், திருநங்கையாக மாறுவதற்கான சிறப்பு சிகிச்சை பிரிவு இருந்து வரும் நிலையில், திருநம்பியாக மாறுவதற்கான சிறப்புப் பிரிவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டலில் திருநர் சமூகத்தினருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவு, தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இங்கு ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிறப்புப் பிரிவில் திருநம்பிகளுக்கான நவீன சிகிச்சை ஏற்பாடுகளை மருத்துவர்கள் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

பட்டதாரி இளம்பெண்கள் இருவர், உணர்வுரீதியாக திருநம்பிகளாக கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் உடல் ரீதியாக திருநம்பியாக மாற இங்கு வந்தனர். இவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக சிறப்பு மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளரும், அகச்சுரப்பியல் துறைத் தலைவருமான ஶ்ரீதர் தலைமையில் மனநல ஆலோசனைகள் தரப்பட்டன, ஹார்மோன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் மகப்பேறு மருத்துவத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, மயக்கவியல் துறை, மனநல ஆலோசனைத் துறை என இந்தத் துறைகள் ஒன்றிணைந்து, இருவருக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றியுள்ளனர். தற்போது இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனர்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், “திருநம்பி, திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவில் வரும் நாட்களில் வியாழன்தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும். இச்சிறப்புப் பிரிவில் தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். இந்தச் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் செயற்கை மார்பகம், உறுப்பு பொருத்துதல், குரல் மாற்றம், லேசர் மூலம் முடிநீக்கம் உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்” என்றார்.

தங்கள் உணர்வு மாற்றத்தை, உடலளவில் முழுமையாக மாற்ற தென் தமிழகத்திலுள்ள பல திருநர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பிரிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 3 செப் 2021