மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

பண்டிகைகளை வீட்டிலிருந்தே கொண்டாட ஒன்றிய அரசு வலியுறுத்தல்!

பண்டிகைகளை வீட்டிலிருந்தே கொண்டாட ஒன்றிய அரசு வலியுறுத்தல்!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளன. கேரளாவில் ஓணம் பண்டிகையொட்டி அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளினால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதனால்தான் பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவைபடுமாயின் பண்டிகை காலங்களில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “நாட்டில் பதிவாகும் மொத்த பாதிப்புகளில் 69 சதவிகிதம் கேரளாவில் பதிவாகிறது. கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் 42 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு மேல் உள்ளது. 38 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 5-10% ஆக உள்ளது.

இருப்பினும், நாட்டில் 18 வயதை கடந்தோரில் 16 சதவிகிதம் பேர் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 54 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

சிக்கிம், தாத்ரா-நாகர் ஹவேலி , ஹிமாச்சல் பிரதேசம் ஆகியவற்றில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூடுசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தினாலும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தடுப்பூசியின் இரண்டாம் டோஸைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்த வேண்டும். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பண்டிகை காலம் குறித்து பேசிய அவர், “நாம் கொரோனா இரண்டாம் அலையில் இருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் வீடுகளில் இருந்தபடியே விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அதைத் தாண்டி கட்டாயம் ஒன்றுகூட வேண்டும் என்றால், அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும்.

C.1.2 என்ற உருமாறிய கொரோனா இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதனால், அங்கிருந்து வருவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா வந்ததும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸால் இதுவரை 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “பண்டிகை காலங்களில் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனா நம்மை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அலட்சியத்தால் நிலைமையை மேலும் சிக்கலாக்கி கொள்ளக் கூடாது. அதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

முழுமையான பாதுகாப்புக்கு, இரண்டாவது டோஸ் முக்கியம். முதல் டோஸை விட இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான் ஒருவருக்கு பாதுகாப்பு அதிகமாகிறது. இரண்டாவது டோஸ் போடாமல் இருப்பவர்கள், தயவுசெய்து டோஸை விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

வெள்ளி 3 செப் 2021