பள்ளி ஆசிரியைக்கு கொரோனா!

public

கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் இயங்க தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கூறுகையில், “மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்துபவர். ஆனால், இவர் வகுப்புகளுக்கு செல்லவில்லை. ஆசிரியைகள் அறையில்தான் இருந்துள்ளார்.

தற்போதுவரை பள்ளிக்கு வரும் மாணவிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆசிரியர்கள் யாருக்காவது கொரோனா அறிகுறி, உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாகப் பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “பள்ளிகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் வர வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக தான் அவர் பள்ளிக்கு வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை முதல் அவருக்கு உடல் சோர்வு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரோடு தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறந்த இரண்டாம் நாளே ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற செய்தி பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *