மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் சிறப்பு தடுப்பூசி முகாம், 24 மணி நேரமும் செயல்படுகிற முகாம் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 60 கிராமங்களில் 100 சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி செலுத்தியதற்காக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதேசமயம் பள்ளி, கல்லூரி, வேலை,வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகின்றது. இதன்மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மது வாங்க வருவோர் ஆதார் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 76 மதுக்கடைகள் உள்ளன. இதன்மூலம் நாள்தோறும் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு மது விற்பனையாகிறது. இங்கு, பண்டிகைக் காலம் மற்றும் கோடைக் காலத்தில் மது விற்பனை இரட்டிப்பாவது வழக்கம். குளிர்ப் பிரதேசம் மற்றும் சுற்றுலாத் தலம் என்பதால் எப்போதுமே மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் மது வாங்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட அதிகாரி சேகர் கூறுகையில், ''மக்கள் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருவோர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி செலுத்துவார்கள்” என்று கூறினார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில்தான் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள மாநிலத்தில் மது வாங்க வருவோர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 2 செப் 2021