மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

தாயை கவனிக்க ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்படுமா?

தாயை கவனிக்க ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்படுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் வழங்கக் கோரிய மனுவை பரிசீலிக்க தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை மத்திய சிறையில் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ” முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் உள்ள மருத்துவமனையில் எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது உடனிருந்து என்னை கவனித்து கொள்வதற்காக எனது மகன் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க கோரி 2 முறை மனு அளித்தேன். ஆனால் 2 முறையும் எனது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது எனது மற்றொரு கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். என்னுடைய வயது முதிர்வை கருத்தில் கொண்டு, என்னை உடனிருந்து கவனித்துக்கொள்வதற்கு எனது மகனுக்கு 2 மாத காலம் பரோல் வழங்க கோரி மீண்டும் 2021 ஜூன் 26ஆம் தேதி மனு அளித்துள்ளேன். என் மனுவை பரிசீலித்து ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(செப்டம்பர் 2) நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமுருகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டி வாதிட்டார்.

இதையடுத்து,மனுதாரரின் மனு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு ஆறு வாரத்திற்குள் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன் சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த மே மாதம் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்களாக அவருக்கு தமிழ்நாடு அரசு பரோலை நீட்டித்து வருகிறது.

ஆனால் அதே வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், உட்பட பலரும் பரோல் கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு பரோல் வழங்க மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 2 செப் 2021