மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்: தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம்: தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சாலை விபத்து, மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ”செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பொது காப்பீட்டு மன்றம் சார்பில் நேற்று (செப்டம்பர் 1) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தக் காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதேநேரத்தில், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையத்தின் விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுகிறது. அதனால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 2) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, பொதுக் காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி பொதுக் காப்பீட்டு மன்றம், காப்பீடு ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் ஆகியோரை வழக்கில் சேர்த்து, பதிலளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து தனது முந்தைய உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், கட்டாயக் காப்பீடு உத்தரவை ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறப்பித்தவுடன், துரிதமாக செயல்பட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசை பாராட்டினார்.

தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 2 செப் 2021