மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

பால்புதுமையினரை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை!

பால்புதுமையினரை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை!

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர்களை (ஓரினச் சேர்க்கையாளர்கள்) துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய நடத்தை விதியை கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரு பெண்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுடைய நட்பு காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும்

மதுரையிலிருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, பால்புதுமையினர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 1) மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அப்போது மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களையும் காவல் துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதுபோன்று, ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை கையாளும்போது சுயகட்டுப்பாடுடனும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து,வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 1 செப் 2021