மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

10 ரூபாய்க்கு கொள்முதல்: கலங்கும் வெங்காய வியாபாரிகள்!

10 ரூபாய்க்கு கொள்முதல்: கலங்கும் வெங்காய வியாபாரிகள்!

நன்கு விளைச்சல் இருந்தும் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழகத்தில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ததாலும், வேரழுகல் நோய் தாக்குதலினாலும், விளைச்சல் குறைவினாலும் சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்டது. இதனால் தமிழக அரசு எகிப்து நாட்டு சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்து பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்தது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பருவமழை கைகொடுத்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. நோய் தாக்குதல், விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்தபோதும், சின்ன வெங்காயம் நன்கு விளைச்சலாகி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை தான் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ஏற்கனவே கொரோனா முதல், இரண்டாவது அலையினால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டதால், மூன்றாவது அலை வந்து, முழு ஊரடங்கு அமல்படுத்தினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வியாபாரிகள் கேட்ட விலைக்கு சின்ன வெங்காயத்தைக் கொடுக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் சின்ன வெங்காய சாகுபடிக்குச் செலவழித்த தொகையை கூட எடுக்க முடியவில்லை” என்றனர்.

இந்த நிலையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் சில விவசாயிகள் விளை நிலங்களை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் பட்டறை கட்டி சின்ன வெங்காயத்தைப் பாதுகாப்பாக சேமித்து வைத்தாலும், அது மூன்று மாதங்கள் வரைதான் தாக்குப்பிடிக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்தாலும், சில இடங்களில் சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

செட்டிகுளத்தில் உள்ள சின்ன வெங்காய வணிக வளாகத்தை திறந்து, அதில் ஏலம் மூலம் விற்பனை நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பயன்பாட்டில் இல்லாத செட்டிகுளம் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கினை, சேமிப்பு கிடங்காக அதிகாரிகள் மாற்றினால், அதில் சின்ன வெங்காயத்தை ஆறு மாதங்கள் வரை சேமித்து வைத்து விற்பனை செய்யலாம்.

மேலும் சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

-ராஜ்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 30 ஆக 2021