மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி பெருவிழா இன்று ஆரம்பம்!

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி பெருவிழா இன்று ஆரம்பம்!

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி நடக்கிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்தப் பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7ஆம் தேதி தேர் பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ஆம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

எனவே பக்தர்கள் இல்லாமல் இன்று கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவ நாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடி வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரிய மாதா கோயில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவத்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.

மேலும் பக்தர்கள் வருவதைத் தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீஸார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்குச் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் மின்விளக்குகளால் கொடி மரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருவிழா நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

ஞாயிறு 29 ஆக 2021