மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால்!

கிச்சன் கீர்த்தனா: இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால்!

திருமணமான தம்பதியருக்கு கோவைப் பகுதியில் வழங்கப்படுகிறது இந்த இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால். அரிசி மாவிலுள்ள கார்போஹைட்ரேட் உடல் ஊட்டத்துக்கு உதவும். தேங்காய்ப்பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் உடல் பலத்தையும் கூட்டும். ரத்தசோகையைச் சீர்செய்யும்.

என்ன தேவை?

அரிசி மாவு - ஒன்றரை கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் - அரை மூடி

சர்க்கரை / கரும்புச் சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு

ஏலக்காய் - 2

சுக்குப் பொடி - அரை சிட்டிகை (அ) சிறு சுக்குத் துண்டு

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

இடியாப்பம் எப்படிச் செய்வது?

அரிசி மாவை எடுத்து வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மாவுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொதிக்கவைத்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒரு கரண்டியால் கலக்கவும். சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அந்த மாவில் ஒரு பங்கை இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பின்னர் இட்லித் தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக எண்ணெய் சேர்த்து அதன் மேல் இடியாப்பத்தைப் பிழியவும். வேண்டுமானால் சுவைக்குத் துருவிய தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் வைக்கும் இட்லிப் பாத்திரத்தில் முன்னரே தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சூடான பின் இட்லித் தட்டுகளை வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும். ஆறில் இருந்து ஏழு நிமிடங்கள் வேகவைக்கவும். சுடச்சுட இடியாப்பம் தயார்!

தேங்காய் சுக்குப்பால் எப்படிச் செய்வது?

அரை மூடி தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸியில் சேர்த்து, ஏலக்காயும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து அரைக்கவும். அரைத்த தேங்காயை சுடுநீர் சேர்த்து நன்றாக வடிகட்டவும். ஏலக்காய் சேர்க்கும்போது அரை சிட்டிகை சுக்குப் பொடி அல்லது சிறு சுக்கு துண்டை நசுக்கி சேர்த்தால் சுவையும் மணமும் கூடும். தேவையான அளவு சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரை சேர்த்து சூடான இடியாப்பத்துடன் எடுத்துக் கொள்ளலாம். கருப்பட்டி சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 28 ஆக 2021