மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியம் : சுகாதாரச் செயலாளர்!

அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியம் : சுகாதாரச் செயலாளர்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க, அடுத்த 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் நேற்று(ஆகஸ்ட் 26) ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், “ ஒன்றிய அரசிடமிருந்து இந்த மாத தொகுப்பில் தற்போது வரை 63.76 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கூடுதலாக 5.89 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 16.75 லட்சம் தடுப்பூசியும் விரைவில் வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதுபோன்று, வரும் மாதத்திற்கு ஒன்றிய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளது. தற்போது நம்மிடையே கையிருப்பில் இருக்கும் 14 லட்சம் தடுப்பூசிகள் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தடுப்பூசிகளும் ஓரிரு நாட்களுக்குள் வந்துவிடும்” என்று கூறினார்.

கொரோனா தொற்று தொடர்பாக பேசிய அவர், “ நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் அங்கிருந்து

தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

பக்கத்து மாநிலங்களுக்கு வேலைக்காக நாள்தோறும் சென்றுவரும் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர்,

தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டதால் நோய் இல்லை என்று மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

ஒன்றிய அரசு எச்சரிக்கை

பண்டிகைகளை அலட்சியமாக கையாண்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.  

இதுகுறித்து பேசிய ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 46 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 58 சதவிகித பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்களில் 51 சதவிகிதம் பேர் கேரளாவில் உள்ளனர். இது கவலையளிக்கக் கூடியது.

கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால் நாம் அனைவரும் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பண்டிக்கைக்கு பிறகும் கொரோனா தொற்று அதிகரிப்பதை நாம் பார்த்து வருகிறோம். வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் சில பண்டிகைகள் வருகின்றன. அதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். அலட்சியமாக பண்டிகைகளை கொண்டாடினால் தொற்று அதிகரிக்கும்” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 27 ஆக 2021