மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு!

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு!

சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையக்காரனூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.எம். பொறியியல் தனியார் கல்லூரியிடம் கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நேற்று (ஆகஸ்ட் 25) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டடங்களுக்குக் கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்கள், சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றி வருவதால், பல கிராமங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குவது வேதனை அளிக்கிறது என்றார்.

கிராம மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை குறிப்பிட்ட நீதிபதி, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி விதிப்பு குழுவை அமைக்கும்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இதுவரை விதிக்கப்பட்ட வரிகள் முறையாக விதிக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்கள், செலுத்த வேண்டிய வரி பாக்கி விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையிலும், இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்த ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 26 ஆக 2021