மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: நீதிமன்றம்!

ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு  செல்லும்: நீதிமன்றம்!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய ஒன்றிய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு விசாரித்தது.

அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். திமுக தரப்பில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், நீண்ட போராட்டங்களுக்குப் பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை என்று விளக்கமளித்த ஒன்றிய அரசு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று(ஆகஸ்ட் 25) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது என்பதால், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது.

அதேசமயம், பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதல்ல என என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதோடு, திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 25 ஆக 2021