கிச்சன் கீர்த்தனா: வட்லாப்பம்

public

ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்ததும் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன. புதுமணத் தம்பதிகள் என்றாலே அனைவருக்கும் தனி கரிசனம்தான். பரிசுப் பொருள்களாலும் பாராட்டுகளாலும் அவர்களைத் திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து, பார்த்துப் பார்த்துச் சமைத்து விருந்தளித்துச் சிறப்பிப்பார்கள். இந்த வட்லாப்பம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதியில் திருமணமான கணவன் மனைவிக்கு வழங்கப்படும் சிறப்பு உணவு. முட்டை, தேங்காய்ப்பால், முந்திரி, பொட்டுக்கடலை ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தாம்பத்ய வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

**என்ன தேவை?**

நெய் – 50 கிராம்

முட்டை – 10

சர்க்கரை – கால் கிலோ

முந்திரி – 50 கிராம்

பொட்டுக்கடலை – 25 கிராம்

உப்பு – ஒரு சிட்டிகை

கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு டம்ளர்

**எப்படிச் செய்வது?**

முட்டையுடன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு முந்திரி மற்றும் பொட்டுக்கடலையைத் தனியாக மிக்ஸியில் வெண்ணெய் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்திருந்த முட்டை – சர்க்கரை கலவை மற்றும் பொட்டுக்கடலை – முந்திரி கலவையை ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். அதன் மேலாக, தேங்காய்ப் பால், நெய்யை ஊற்றவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும்.

இட்லிச் சட்டியில் தனியாக அரை லிட்டர் அளவில் நீரை எடுத்து ஸ்டவ்வில் வைக்கவும். ஏற்கெனவே கலந்து வைத்திருந்த வட்லாப்பம் கலவையை மூடப்பட்ட தனி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் இட்லி சட்டியில் உள்ளே கொதிக்கும் நீரின் மீது அந்த வட்லாப்பம் கலவை கொண்ட பாத்திரம் படும்படியாக வைத்துக்கொண்டு இட்லி சட்டியை மூடவும். அரை மணி நேரம் நன்றாக வேகவிடவும். பின்னர் வெளியே எடுத்தால் வட்லாப்பம் ரெடி!

**[நேற்றைய ஸ்பெஷல்: உணவு அலர்ஜி… தடுப்பூசி போடலாமா?](https://www.minnambalam.com/public/2021/08/22/1/vaccineation-for-food-allergy)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *