மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

போக்குவரத்து சிக்னலில் வாழ்க்கை பாடம்: அசத்தும் எஸ்.ஐ!

போக்குவரத்து சிக்னலில் வாழ்க்கை பாடம்: அசத்தும் எஸ்.ஐ!

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் கனிவாகப் பேசி அவர்களின் மனதை கவர்ந்த போக்குவரத்து எஸ்.ஐ-யை மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

பொதுவாக போலீஸ் என்றாலே முரட்டுத்தனம் என்ற பிம்பம் தான் மக்கள் மனதில் வரும். அதனால் அவர்களை கண்டாலே ஒருவித அச்சத்துடன் ஒதுங்கி செல்லும் மக்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிலும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட போக்குவரத்து எஸ்.ஐ தான் பழனியாண்டி. போக்குவரத்து சிக்னலை சரிசெய்யும் காவல் ஆய்வாளர்கள் கடுப்போடு இருப்பார்கள் என்று பார்த்திருப்போம், ஆனால், இவர் எப்போதும் சிரிப்போடும் மக்களிடம் கனிவோடும் நடந்து கொள்கிறார்.

மதுரை மாநகரக் காவல் துறையின் மதிச்சியம் போக்குவரத்துப் பிரிவு எஸ்.ஐ பழனியாண்டி. விவசாய குடும்ப பின்னணியிலிருந்து வந்த இவர் கடந்த 29 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம், பழ மார்க்கெட் சந்திப்பு, மேலமடை, சுகுணா ஸ்டோர், ஆவின் நிலையம் உள்ளிட்ட சிக்னல்களில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

போக்குவரத்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளிடம், “ரோடுன்னா டிராஃபிக் இருக்கும், மனுஷன்னா சிக்கல் இருக்கும், குடும்பம்னா சண்டை இருக்கும், எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகணும், விட்டுக்கொடுத்துப் போகணும், அதுதான் வாழ்க்கை.

சிரமம், சிக்கல் இல்லைன்னா வாழ்க்கையில்லை, எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. ஒவ்வொரு வண்டியா பொறுமையா வாங்க. விட்டுக்கொடுத்து வாழுங்க. பொறுமையா வாங்க, வாழ்க்கை அருமையாக இருக்கும். வசதியோடு வாழணும்னா அசதி வரும் வரை உழைக்கணும்.

கட்டின மனைவிகிட்ட காலம் பூரா விட்டுகொடுக்கணும்.அடுத்தவங்க முன்னாடி மனைவியை விட்டு கொடுக்கக் கூடாது. எல்லாரும் நல்லாருக்கணும், குடும்பம் குட்டிகளோட நல்லா வாழணும், அதனால ரோட்டுல போகும்போது கவனமா போகணும், தலைக்கவசம் போட்டு போகணும்” என அமைதியான வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை தினமும் கூறி வருகிறார்.

இதை சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற மருத்துவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு போக்குவரத்து எஸ்.ஐ பழனியாண்டியை செல்போனில் அழைத்து பேசி பாராட்டினார். மேலும், மதுரை வரும்போது அழைத்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, எஸ்.ஐ பழனியாண்டியை நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து போக்குவரத்து எஸ்.ஐ பழனியாண்டி கூறுகையில், “வேலை பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளோடு வருபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த மாதிரி பேசி வருகிறேன். இது அவர்களுக்கு மன நிம்மதியை தரும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு டிஜிபி மற்றும் மதுரை மாநகர ஆணையர் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

ஞாயிறு 22 ஆக 2021