மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

அரசு மருத்துவமனையில் பிரசவம்: ஐஏஎஸ் தர்மலாஶ்ரீ கணவரின் நெகிழ்ச்சி!

அரசு மருத்துவமனையில் பிரசவம்: ஐஏஎஸ் தர்மலாஶ்ரீ கணவரின் நெகிழ்ச்சி!

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூர் கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஶ்ரீ. இவர், 2019இல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று, தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். தர்மலாஶ்ரீக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தாமரைக்கண்ணன் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உயர்கல்வி (எம்டி) பயின்று வருகிறார்.

இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த தர்மலாஶ்ரீ பிரசவத்துக்காக, கரடிப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார். பிரசவ சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சேர்ந்தார். அங்கு அவருக்கு 20ஆம் தேதி நள்ளிரவு அறுவைசிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது குறித்து பேசியுள்ள தர்மலாஶ்ரீயின் கணவர் தாமரைக்கண்ணன், “என் மனைவி என்கிட்ட, ‘எனக்கு அரசு மருத்துவமனையில பிரசவம் பார்க்கலாம்’னு சொன்னப்போ எனக்கும் அதுதான் சரினுபட்டது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை மேல எனக்கும் என் மனைவிக்கும் பெரிய நம்பிக்கை உண்டு. தனியார் மருத்துவமனைகளைவிட தரமான மருத்துவக்கருவிகளும் சோதனைக்கூடங்களும் அரசு மருத்துவமனைகளில் இருக்கு.

தர்மலாஶ்ரீ, கர்ப்பகாலத்தில் ஆலப்புழாவிலதான் ரெகுலர் செக்கப் பண்ணிட்டு இருந்தாங்க. டெலிவரியை சேலத்துல பார்த்துக்கலாம்னு என் மனைவி முடிவு பண்ணினப்போ, சேலம் அரசு மருத்துவமனையில 24 x 7 அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் இருக்காங்க. ஆய்வுக்கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுன்னு எல்லாமே சிறப்பா செயல்படுவதை உணர்ந்தோம்.

‘பொதுமக்கள்கிட்ட அரசின் சாதனைகளை ஓர் அரசு அதிகாரியா கொண்டுபோய் சேர்க்கிறது என்னோட கடமை. அதுல முக்கியமானது, சுகாதாரத் துறை. நானே அரசு மருத்துவமனையைத் தவிர்க்கிறது அறமற்ற செயலா இருக்காதா?’னு கேட்ட என் மனைவி, நம்பிக்கையோட போய் சேலம் அரசு மருத்துவமனையில அட்மிட் ஆனாங்க. இப்போ அம்மாவும் பொண்ணும் நலமா இருக்காங்க’’ என்கிறார்.

சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு துறைத் தலைவர் டாக்டர் சுபா, “இங்கே ஜூலை மாதம் மட்டும் 1,072 குழந்தைகள் பிறந்திருக்காங்க. சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் தனபால்னு எல்லோரது வழிகாட்டுதலும் இதற்கு முக்கிய காரணம். தர்மலாஸ்ரீ போன்ற அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும்போது, அது பொதுமக்களுக்கு நம்பிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் அமையுது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் சிறந்து விளங்கக்கூடிய ஒன்றா இருக்கு. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ வசதினு முன்னோடியா திகழுது. மக்கள்கிட்ட அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து அதிகப்படுத்தணும்’’ என்றார்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 22 ஆக 2021